நடிகர்- நடிகைகள் உண்ணாவிரதம் : வீடியோ
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர்நிறுத்தம் கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காலை 8 மணிக்குத் துவங்கியது உண்ணாவிரதம்.
நடிகர் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையில் தமிழின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோர் காலையிலே வந்துவிட்டனர்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கி வைத்தார். மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் இதேபோல மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துப் பேசினர்.
நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, சிவக்குமார், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், பசுபதி, அர்ஜூன், மணிவண்ணன், வடிவேலு, சுந்தர் சி, நடிகைகள் சினேகா, மும்தாஜ், ராதிகா சரத்குமார், சத்யப்பிரியா, குயிலி, மனோரமா உள்பட பலரும் காலையிலேயே உண்ணாவிரதத்துக்கு வந்துவிட்டனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேச அழைத்தார். மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு சில வார்த்தைகளில் தங்கள் உணர்வுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அஜீத் வந்தார்:
காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்தார் அஜீத். முழுக்க கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அஜீத்தை ராதாரவியும் விஜய்யும் வரவேற்றனர். அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க, உடனே ராதாரவி, 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம். தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.
விஜயகாந்த்:
11.30 மணிக்கு நடிகர் விஜயகாந்த் வருகை தந்தார். மேடையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
வந்தார் ரஜினி:
மாலையில்தான் வருவார் எனக் கூறப்பட்ட ரஜினி, பகல் 11.45 மணிக்கு வந்துவிட்டார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தனர்.
ரஜினி வந்த ஒரு மணி நேரம் கழித்து கமல்ஹாசன் உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.
நயன்தாரா- த்ரிஷா:
அதே போல நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
எம்ஜிஆர் பாடல்கள்:
நடிகர் நடிகைகளின் பேச்சுக்கு நடுவே மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன
No comments:
Post a Comment